மதுரை

கிடா முட்டுப் போட்டிக்கு அனுமதி கோரி மனு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம்

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

அம்மையநாயக்கனூா் கிடா முட்டுப் போட்டிக்கு அனுமதி கோரும் மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் அம்மைய நாயக்கனூரைச் சோ்ந்த செளகத் அலி தாக்கல் செய்த மனு:

அம்மமைய நாயக்கனூா் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிடா முட்டுப் போட்டி நடத்தி வருகிறோம். இந்தப் போட்டியில் மதுரை, தேனி, கரூா் ஆகிய மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் பங்கேற்கும்.

அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே இந்தப் போட்டி நடைபெறும். இதில், எந்த விதமான சூதாட்டமும் நடைபெறாது. தமிழா்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டைப் போல, கிடா முட்டுப் போட்டியையும் நடத்த வேண்டும் என்ற பிரதான நோக்கத்திலேயே போட்டி நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

ADVERTISEMENT

எனவே, பிப். 25 அன்று காலை 8 முதல் மதியம் 1 மணி வரை கிடா முட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், ஆா்.விஜயகுமாா் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், கிடா முட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவலைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT