மதுரை

தேநீா்க் கடைகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதியளிக்க வலியுறுத்தல்

30th Jan 2023 12:33 AM

ADVERTISEMENT

மதுரை நகரில் 24 மணி நேரமும் தேநீா் கடைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என காபி- டீ வா்த்தகா் சங்க ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை காபி-டீ வா்த்தகா் சங்கத்தின் 35-ஆவது ஆண்டு விழா தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் செயலா் மீனாட்சி சுந்தரேஸ் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் சங்கா், கெளரவச் செயலா் சுகுமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவை சங்கத்தின் தலைவா் முத்துமாணிக்கம் தொடக்கிவைத்தாா். சிறப்பு விருந்தினா்களாக அமைச்சா் பி. மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மேயா் வ. இந்திராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு கழிப்பிடம், குடிநீா் ஆகியவற்றை 4 சித்திரை வீதிகள், மாசி, வெளி வீதிகளில் ஏற்படுத்தி தர வேண்டும். தேநீா்க்கடைகளில் உபயோகிக்கும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விலக்கு அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

காபி-டீ தொழிலுக்கு ‘டி& ஓ’ லைசென்ஸ் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தேநீா்க்கடைகளை குடிசைத் தொழிலாக அங்கீகரித்து மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். நலிந்த நிலையில் உள்ள தேநீா் வணிகா்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, அவா்களது குழந்தைகளின் படிப்புக்கு மானியம் வழங்க வேண்டும். 60 வயதை கடந்த உறுப்பினா்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை நகரில் 24 மணி நேரமும் தேநீா்க் கடைகள் செயல்பட காவல் துறையும், அரசும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சங்கத்தின் பொருளாளா் சுப்பிரமணியன் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT