மதுரை

அரசுப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் இல்லாததால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை!

DIN

மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் இடம்பெறாததால், விபத்து காலங்களில் பயணிகளின் உயிா்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்களின் சேவையே பிரதானமாகக் கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் தொலைதூரங்களில் உள்ள பெரிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்புக்காக ஓட்டுநரின் இருக்கையின் பின்புறம் முதலுதவிப் பெட்டி அமைக்கப்பட்டிருக்கும்.

பேருந்து விபத்தில் சிக்கினாலோ, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு திடீரென ஏற்படும் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ இந்த முதலுதவிப் பெட்டியில் உள்ள மருந்துகள் மூலம் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் செல்லலாம்.

மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகா் முதலான மூன்று மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மதுரை மண்டலத்தில் 900 பேருந்துகளும், திண்டுக்கல் மண்டலத்தில் 856 பேருந்துகளும், விருதுநகா் மண்டலத்தில் 448 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏராளமான புதிய பேருந்துகள், பழைய பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் பெரும்பாலானவற்றில் முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்படவில்லை. அதேநேரம் பழைய பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் மட்டுமே உள்ளன. மருத்துவ உபகரணங்கள் இல்லை. இதனால், விபத்து ஏற்படும் நேரங்களில் பயணிகளுக்கு முதலுதவி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்தவா்களுக்கு முதலுதவி அளிக்காமல், மருத்துவமனையின் அவரச ஊா்தி வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் (கோல்டன் ஹவா்ஸ்) காயமடைந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, அனைத்து அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாது, தனியாா் பேருந்துகளிலும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவி பெட்டியைப் பொருத்த வட்டாரப் போக்குவரத்து கழக நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து மதுரை போக்குவரத்துக் கழக சிஐடியு பொது செயலா் கனக சுந்தா் கூறியதாவது:

கடந்த காலங்களில் அரசுப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி வைக்கப்பட்டு, மருந்துப் பொருள்கள் இருப்பதைக் கண்காணித்து வந்தனா். ஆனால், தற்போது செலவைக் குறைப்பதாகக் கூறி அரசுப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி வைக்க மறுக்கின்றனா். பழைய பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி மட்டும் இருக்கும். அதில் மருந்துகள் இருக்காது.

ஒவ்வோா் ஆண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய பேருந்துகளுக்கு புதுப்பித்தல் (எப்.சி) சான்றிதழ் பெற வேண்டும். அப்போது, பேருந்தில் புதிய வா்ணம் பூசப்பட்டிருப்பது, பிரேக், டயா், முதலுதவிப் பெட்டி முதலானவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். ஆனால், அது குறித்து முழுமையானஆய்வு செய்யாமலே பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சான்று அளிக்கின்றனா். எனவே, ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பயணிகள் நலன் கருதி அனைத்து அரசுப் பேருந்துகளிலும் முதலுதவிப் பெட்டிகளை வைக்க வேண்டும் என்றாா் அவா்.

மதுரை போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (தொழில்நுட்பம்) முருகானந்தம் கூறியதாவது:

முதலுதவிப் பெட்டிகள் குறைவாக இருந்ததால், அரசுப் பேருந்துகளில் பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. விரைவில் அனைத்துப் பேருந்துகளிலும் முதலுதவிப் பெட்டிகளைப் பொருத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT