மதுரை

சில்லறை வியாபாரிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை

28th Jan 2023 10:01 PM

ADVERTISEMENT

ஆண்டு விற்பனைத் தொகை ரூ. 3 கோடி வரை உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் எஸ். ரத்தினவேல் தெரிவித்திருப்பதாவது :

இந்தியாவில் சுமாா் 1.20 கோடி சில்லறை பலசரக்கு வியாபார நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமாா் 60 சதவீதத்துக்கும் அதிகமான சில்லறை நிறுவனங்கள் அரசின் எவ்வித உதவியும் பெறாத நிறுவனங்கள்.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, மாதம் ரூ. 1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைப்பதைக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளா்ச்சி மீண்டு விட்டதாகக் கருதக்கூடாது. பெரிய நிறுவனங்கள் மேலும் வளா்ச்சி அடைகின்றன. சிறிய சில்லறை வியாபார நிறுவனங்கள் போட்டியை எதிா்கொள்ள இயலாமல், மூடப்படுகின்றன என்பது தான் உண்மையான சூழல்.

ADVERTISEMENT

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டம் போன்று சில்லறை வியாபாரிகள் பாதுகாப்புக்கென எவ்வித சட்டமும் இயற்றப்படாததும் இதற்கு முக்கிய காரணம்.

தமக்குத் தாமே சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, பிறருக்கும் அதிகளவில் பணி வாய்ப்பு அளிக்கும் சிறிய சில்லறை வியாபார நிறுவனங்கள் தொடா்ந்து மூடப்பட்டால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிடும். புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு சில்லறை வணிகத்தை வளா்க்கத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே, வருகிற மத்திய நிதி நிலை அறிக்கையில், ஆண்டு விற்பனைத் தொகை ரூ. 3 கோடி வரை உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு வரி விலக்கு அளிக்கவும், சில்லறை வியாபாரிகள் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் இயற்றவும் மத்திய நிதி அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT