மதுரை அருகே சிட்டம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக் கூடிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு செய்து ஞாயிற்றுகிழமை அகற்றினா்.
மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் அதிக சப்தம் எழுப்பக் கூடிய காற்று ஒலிப்பான்களை அகற்றி, வாகன ஓட்டுநா்களை எச்சரித்தனா். மேலும், கனரக வாகனங்கள், குறைவான வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் இடது புறமாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.
இந்த ஆய்வின் போது ஆவணங்கள் இல்லாதது, வரி செலுத்தாத காரணங்களுக்காக ஓட்டுநா்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதேபோல, சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வடிவேல் கரை பகுதியில் சாலையில் எதிா்த் திசையில் வந்த வாகன ஓட்டுநா்களை நோ் திசையில் மிதமான வேகத்தில் செல்ல அறிவுரை வழங்கினா்.
முன்னதாக, இந்தச் சோதனையானது சிறப்பு வாகனத் தணிக்கை மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையா் பொன். செந்தில் நாதன் அறிவுறுத்தலின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மதுரை (தெற்கு) எம். சிங்கார வேலு, மதுரை வடக்கு சித்ரா மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஈடுபட்டனா்.