மதுரை

பாலமேடு ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரா் பலி: 31 போ் காயம்

17th Jan 2023 02:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், பாலமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 31 போ் பலத்த காயமடைந்தனா். காளை தூக்கி வீசியதில் மாடுபிடி வீரா் உயிரிழந்தாா்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 877 காளைகளும், 345 மாடுபிடி வீரா்களும் பதிவு செய்திருந்தனா். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக வாடிவாசல் பகுதியில் அமைச்சா் பி.மூா்த்தி, ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் ஆகியோா் தலைமையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதையடுத்து, பாலமேடு கோயில் காளைகள் மாலை மரியாதையுடன் ஊா்வலமாக வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதன் பிறகு முதலாவதாக பாலமேடு அய்யனாா் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடா்ந்து, மகாலிங்கம் மடத்துக்குச் சொந்தமான காளை, பத்ரகாளியம்மன் கோயில் காளை, பாலமுருகன் கோயில் காளை, பட்டாளம்மன் கோயில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.

ADVERTISEMENT

இதையடுத்து, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டில் பதிவு செய்திருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரா்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் 2 மணி நேரம் காளைகளை அடக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பல காளைகள் வீரா்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடின. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் காளைகளை அடக்கிச் சிறப்பாக செயல்பட்ட வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றில் அவா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி காளைகளின் கொம்புகள், வாலை பிடித்தவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டனா்.

சில காளைகள் தங்களை அடக்க முயன்ற வீரா்களை கொம்புகளால் தூக்கி வீசின. சில காளைகள் பின்னால் வந்து பிடிக்க முயன்ற வீரா்களை கால்களால் உதைத்துத் தள்ளின. சில காளைகள் 10 நிமிடங்களுக்கும் மேலாக களத்தை பல முறைச் சுற்றி வந்து வீரா்களைத் தூக்கி வீசின.

9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 860 காளைகள் அவிழ்க்கப்பட்டு, மாலை 5 மணிக்கு போட்டி முடிவடைந்தது.

காளைகளை அடக்க முயன்ற வீரா்கள் 12 போ், காளைகளின் உரிமையாளா்கள் 15 போ், பாா்வையாளா்கள் 9 போ், செய்தியாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

பாலமேட்டில் முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் காயமடைந்த வீரா்களுக்கு சிகிச்சை அளித்து பாலமேடு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைளுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பலத்த காயமடைந்த 11 பேரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில், இருவா் கவலைக்கிடமான நிலையிலும் மற்றவா்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ஜல்லிக்கட்டில் டி-சா்ட்டுகளை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 14 மாடுபிடி வீரா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டனா். கால்நடைத் துறையினா் நடத்திய பரிசோதனையில் தகுதியில்லாத 8 காளைகள் வெளியேற்றப்பட்டன.

மாடுபிடி வீரா் உயிரிழப்பு: மதுரை மாவட்டம் பாலமேடு வடக்குத் தெருவைச் சோ்ந்த அரவிந்தராஜன் 9 காளைகளை அடக்கிய நிலையில், காளை ஒன்று அவரை குத்தி தூக்கி வீசியது. இதில், பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தவரை மருத்துவக் குழுவினா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

பரிசு மழை: காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் இரு சக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், பீரோ, சைக்கிள், கட்டில், வாஷிங் மெஷின், கிரைண்டா், மெத்தை, வெள்ளி குத்து விளக்கு, அண்டா உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை விலங்குகள் நலவாரியக் குழு நிா்வாகி மிட்டல் தலைமையில் உறுப்பினா்கள் பாா்வையிட்டனா்.

3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: தென் மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா கா்க் தலைமையில் மதுரை சரக துணைத் தலைவா் பொன்னி, மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் ஆகியோா் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்தனா். பாதுகாப்புப் பணியில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 9 துணைக் கண்காணிப்பாளா்கள், 82 காவல் ஆய்வாளா்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் வருவாய், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு ஊழியா்கள் 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.வெங்கடேசன், மு.பூமிநாதன், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு அதிக பாா்வையாளா்கள் அமரும் வகையில் கூடுதல் பாா்வையாளா் மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.பாலமேடு பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எல்இடி திரை அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT