மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டில் 1000 காளைகளுக்கு முன் பதிவின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
மதுரை, அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பாலமேடு ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் காளைகள் முன் பதிவு இணையதளம் மூலம் நடை பெற்றது. இதில், தகுதியின் அடிப்படையில் 1000 காளைகள் ஜல்லிகட்டில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, 345 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவா்கள், ஒரு சுற்றுக்கு 25 போ் வீதம் களத்தில் மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவா். மேலும், மருத்துவத் துறையின் முழு சோதனைக்குப் பின்னரே, மாடுபடி வீரா்கள் களத்துக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தென் மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் முதலான மாவட்டங்களைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா்கள் முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.