விருதுநகா் அருகே அப்பளம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கியதில் ஞாயிற்றுக்கிழமை துண்டானது.
விருதுநகா் அருகே உள்ள பாவாலி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜபாண்டி மனைவி பொன்ணு லெட்சமி (30). இவா், அப்பகுதியிலுள்ள தனியாா் அப்பள நிறுவன ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் அப்பள மாவு கலவை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, சேலை இயந்திரத்தில் சிக்கியதில் கை துண்டானது.
இதையடுத்து, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். அங்கு முதலுவிக்குப் பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை அளித்ததாக லட்சுமி தாய் அளித்த புகாரின் பேரில், விருதுநகரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மீது ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.