மேலூா் அருகே வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத பெண் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் புறவழிச்சாலை கூத்தப்பன்பட்டி அருகே சாலையோரம் நடந்துசென்ற பெண் மீது, அந்த வழியாகச் சென்ற வேன் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை ரோந்து வாகன போலீஸாா் மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவா் யாா் என அடையாளம் தெரியவில்லை. மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநா் போலீஸில் சரணடைந்தாா்.
மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.