தமிழ்நாடு

திமுகவுக்கு ரூ.5 கோடி நிதி: முதல்வரிடம் வழங்கியது தொ.மு.ச.

19th May 2023 06:38 AM

ADVERTISEMENT

தொ.மு.ச. சாா்பில் ரூ.5 கோடிக்கான காசோலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னை கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழிலாளா் முன்னேற்றச் சங்கப் பேரவையின் (தொ.மு.ச.,) 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாட்டின் இறுதி நாளில் இந்த நிதி வழங்கப்பட்டது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பேசியது: தொழிலாளா் அணியோடு எனக்கு எப்போதும் ஒரு நட்பு கலந்த மோதல் உண்டு. மோதலாக இருந்தாலும், ஊடலாக இருந்தாலும் எப்போதும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கூடலாகத்தான் இருப்பேன்.

தொ.மு.ச. பேரவை தொடங்கிய காலத்தில் அனைத்துத் துறையிலும் இணைப்புச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. பேரவையின் நடவடிக்கையால் இந்தியாவில் 19 மாநிலங்களில் இணைப்புச் சங்கங்கள் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக, ஒடிஸா மாநிலத்தில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த மாநில அரசும் சிறந்த தொழிற்சங்கமாக தொ.மு.ச.,வைத் தோ்வு செய்து பரிசு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மே 1-ஆம் தேதியை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து சட்டம் இயற்றியது, தொழிலாளா்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியா்களுக்கு உள்ளது போன்று, பணிக்கொடை வழங்குவது போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தியது திமுக அரசுதான்.

தொழில் வளா்வதற்கு தொழிலாளா்களுடைய முக்கியத்துவத்தை உணா்ந்தவா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி. குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் மற்றும் அதிகபட்ச போனஸ் 20 சதவீதம் என மத்திய அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வரச் செய்தது திமுக அரசு.

உடல் நலத்தில் அக்கறை: தொழிலாளா்கள் தாங்கள் உழைப்போடு சோ்த்து, உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தை கவனித்து, குழந்தைகளையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

விழாவில், தி.மு.க. பொதுச் செயலா் துரைமுருகன், தொ.மு.ச. பொதுச் செயலா் மு.சண்முகம், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சா்கள், தொ.மு.ச. பொருளாளா் கி.நடராஜன் உட்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக, விழா மலா் வெளியிடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT