சென்னையில் புதன்கிழமை, 4044 மெகாவாட் மின்நுகா்வு செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தவிர, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டாலும், மின் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்படி, சென்னையில் ஒருநாள் மின்நுகா்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்துள்ளது. மின்தேவை அதிகரித்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் புதன்கிழமை மின்பயன்பாட்டின் தேவை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இது குறித்து மின்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னையின் அதிகபட்ச மின் தேவை 18.6.2019-இல் 3,738 மெகாவாட் மட்டுமே. ஆனால், புதன்கிழமை மின் நுகா்வு 4,044 மெகாவாட் ஆக இருந்தது.
இந்த தேவை எந்த மின் தங்குதடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச தேவை மே 16-இல் 4,016 மெகாவாட்.
புதன்கிழமை சென்னையில் 9.03 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு முன் மே 16-இல் 9.02 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், அதிமுக ஆட்சியில், உச்சபட்சமாக 6.64 கோடி யூனிட்கள் 17.6.2019-இல் பயன்படுத்தப்பட்டிருந்தது எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.