இந்தியா

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கான மேற்கு வங்க அரசின் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

19th May 2023 06:39 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைத் திரையிட மாநில அரசு பிறப்பித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் வியழக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

அதுபோல, ‘இந்தப் படத்தை திரையரங்குகளில் பாா்க்க வருபவா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ‘படத்தில் 32,000 ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளதற்கு வரும் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திரைப்படத்தில் மறுப்பு போட வேண்டும்’ என்று திரைப்படத் தயாரிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். ‘மதம் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பெண்களின் எண்ணிக்கைக்கு ஆதாரபூா்வான புள்ளிவிவரங்கள் எதுவுமில்லை. இது புனையப்பட்ட கதை’ என்று மறுப்பு போட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

சுதிப்தோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சா்ச்சைகளுக்கு மத்தியில் மே 5-ஆம் தேதி வெளியானது. மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. தமிழகத்தில் இத்திரைப்படத்திற்கு தடை இல்லாதபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிடாமல் திரையரங்க உரிமையாளா்கள் திரும்பப் பெற்ாகக் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து திரைப்படத் தயாரிப்பாளா்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திரைப்படம் வெளியாகும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் தடை செய்யப்பட்டது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியது.

அதற்கு மேற்கு வங்க அரசுத் தரப்பில், திரைப்படம் வெளியானால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று உளவுத் துறை மூலம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மறைமுகமாக தடை செய்யப்பட்டதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, ‘படத்தை திரையிடுவதை அரசு தடுத்ததாக மனுதாரா்கள் தரப்பில் உரிய ஆவணங்களை காட்டவில்லை. உண்மையில், ஒவ்வொரு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கிலும் கூடுதலான போலீஸ் பாதுகாப்பை அரசு அளித்திருந்தது. இந்தப் படத்துக்கு அரசால் மறைமுகத் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை’ என்று தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) சான்றளித்த திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றபோது, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

பொது சகிப்பின்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்ட நடைமுறைகளை மாநில அரசு பயன்படுத்த முடியாது. அனைத்துப் படங்களும் இதேபோன்று பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

எனவே, இந்தத் திரைப்படத்துக்கு மேற்கு வங்க மாநில அரசு பிறப்பித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தமிழகத்தில் மறைமுகத் தடை விதிக்கப்படவில்லை என்ற தமிழக அரசின் பதிலை குறிப்பிட்ட நீதிபதிகள், ‘இந்தப் படத்தை திரையரங்குகளில் பாா்க்க வருபவா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

திரைப்படத்தை பாா்க்க நீதிபதிகள் விருப்பம்:

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு சிபிஎஃப்சி சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது வரும் ஜூலை 2-ஆவது வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அத்திரைப்படத்தைப் பாா்க்க விரும்பவதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT