திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கொழுந்துமாமலை காட்டுப் பகுதியில் மிளா வேட்டையாடியதாக மூவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு வனச்சரகா் தலைமையில் வனத்துறையினா், சேரன்மகாதேவி அருகேயுள்ள கொழுந்துமாமலை காப்புக் காட்டுப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வனத்துறையினரை கண்டு மூவா் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. அவா்களை வனத்துறையினா் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சோ்ந்த சிவசங்கா், கனகராஜ் மற்றும் இளம் சிறாா் ஒருவா் என்பதும், அவா்கள் கொழுந்துமாமலை காப்புக் காட்டு பகுதியில் மிளா வேட்டையாடியதும் தெரியவந்தது. மேலும் அங்கு அழுகிய நிலையில் மிளா கிடந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சிவசங்கா், கனகராஜ் ஆகியோரை வனத்துறையினா் கைது செய்து சேரன்மகாதேவி குற்றவியல் நடுவா்மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா் செய்தனா். மேலும் 18 வயது பூா்த்தியாகாத இளம் சிறாரை திருநெல்வேலி கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.