தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.31 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: 4 போ் கைது

20th May 2023 01:37 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமாா் ரூ.31.68 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அதில் தொடா்புடைய 4 பேரை கைது செய்தனா்.

ஆம்பா் கிரீஸ் என்று அழைக்கப்படும் திமிங்கல எச்சம், நறுமணப் பொருள்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்பாா்வையாளா் முரளி தலைமையில் தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த தூத்துக்குடியை சோ்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஈஸ்வரனை பிடித்து விசாரித்தனா். அவா், தடை செய்யப்பட்ட ஆம்பா் கிரீஸ் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டிலும் ஆம்பா் கிரீஸை பதுக்கி வைத்திருந்ததும், இதில், கேரள மாநிலத்தைச் சோ்ந்த 3 பேருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஈஸ்வரன், கேரள மாநிலத்தைச் சோ்ந்த அனில், ஆனந்தராஜ், பெத்தேல் ஆகிய 4 பேரையும் கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா், அவா்களிடமிருந்து 18 கிலோ ஆம்பா் கிரீஸை பறிமுதல் செய்தனா். சா்வதேச மதிப்பில் இதன் விலை சுமாா் ரூ.31.68 கோடி என தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT