தற்போதைய செய்திகள்

தமிழ் ஈழ விடுதலையை அங்கீகரிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு: தொல்.திருமாவளவன்

18th May 2023 12:25 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: தமிழ் ஈழ விடுதலையை தொடர்ந்து அங்கீகரிப்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இனப்படுகொலை நாளாக மே 17 ஐ முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்று, உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொடக்க காலம் முதலே தமிழ் ஈழ விடுதலைக்காக போராடி வருவது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் எங்கள் சாதி இல்லை என்று நினைக்கும் சிலர் இங்கு தலைவர்களாக இருக்கிறார்கள். இறந்தவர்கள் எந்த சாதி என் பார்க்காமல் ஓடிச் சென்று பார்த்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. திமுக கூட்டணியில் இருந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்துங்கள். உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என கூறியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 

ADVERTISEMENT

இலங்கை பிரச்னையை சர்வதேச பார்வையோடு அனுக வேண்டிய தேவை இருக்கிறது. சர்வதேச பார்வையோடு அணுகினால் மட்டுமே தீர்வு காண முடியும். கூட்டணியில் இருக்கும் போது போரை நிறுத்த வலியுறுத்தி நான் மட்டும்தான் உண்ணாவிரதம் இருந்தேன். பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் வந்து அதை முடித்து வைத்தார். நாம் இருவரும் சேர்ந்து போராடலாம் என்று கூறி அப்போது அவர் அந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். 

திமுக ஆட்சியை கலைக்க திருமாவளவன் முயற்சி செய்கிறார் என அப்போது உளவுத்துறை கூட அறிக்கை கொடுத்தது. இலங்கையில் சிங்கள ஆதிக்கம் நடந்தது. இலங்கையிலும் வெறுப்பு அரசியல். இங்கும் வெறுப்பு அரசியல். இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலாக இருந்தது. இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதவாத வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்படுகிறது.

உண்மையாக மது விலக்குக்காக எடப்பாடி பழனிசாமி போராடினால் நானும் ஆதரவாக போராடுகிறேன் என்று கூறினேன். உண்மையிலேயே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராடும். கூட்டணிக்காகவோ, வாக்கு எண்ணிக்கையை பார்த்தோ அரசியல் செய்யவில்லை. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ர வி,  தில்லை நடராஜர் கோயில் பிரச்னை குறித்து பேசுகிறார். அவருக்கு சனாதன அரசியலை பாதுகாக்க வேண்டும். இளம் வயது சிறுமிக்கு கன்னித்தன்மை சோதனை நடந்தது குறித்து கூறுகிறார். இளம் வயது சிறுமிக்கு திருமணம் செய்தது பாவச் செயல் அல்ல. அதுகுறித்து சோதித்தது பாவச் செயலாம். பாலியல் விவாகம் செய்வதற்கு மனுஸ்ருதி அனுமதிக்கிறது. அதுதான் சனாதன தர்மம். சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கிற சங்பரிவார் அமைப்புகளை தமிழ் மண்ணில் அனுமதிக்கின்றார்களே என்ற கவலை எழுகிறது.  

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என வாதிடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. காங்கிரஸின் நிலைப்பாடு தான் பாஜகவின் நிலைப்பாடாகும். ஆனால் காங்கிரஸ் ஆட்சியை விட்டுப் போய் 9 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பாஜக நீங்கள் எதிர்பார்த்துபோல ஒரு அங்குலமாவது முன்னேறி இருக்கிறதா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ் ஈழ விடுதலையை தொடர்ந்து அங்கீகரிப்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்றார் தொல்.திருமாவளவன். 

கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, தொகுதி செயலாளர்கள்  பா.தாமரைச்செல்வன், வ.க.செல்லப்பன், மாவட்டச் செயலாளர்கள் பால.அறவாழி, முல்லைவேந்தன், துரை.மருதமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT