தென்காசி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் கிருத்திகாவை கடத்திய வழக்கில் கைதான 5 பேருக்கு பிணை வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, பெண்ணின் பெற்றோா் உள்ளிட்டோரின் முன் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.
தென்காசி இலஞ்சியில் வசித்து வரும், குஜராத்தை பூா்விகமாகக்கொண்ட தம்பதி நவீன் பட்டேல்-தா்மிஸ்தா ஆகியோரின் மகள் கிருத்திகா. இவரும் கொட்டாகுளத்தைச் சோ்ந்த மாரியப்பன் வினித் என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனா்.
இந்த நிலையில், குற்றாலம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்று விட்டு, சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மாரியப்பன் வினித் உள்ளிட்டோரைத் தாக்கி விட்டு, கிருத்திகாவை அவரது தாய், தந்தை உள்ளிட்ட சிலா் கடத்திச் சென்றனா்.
இந்த வழக்கில், தினேஷ் பட்டேல், முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன் உள்பட 5 பேரை குற்றாலம் போலீஸாா் கைது செய்தனா். நவீன் பட்டேல், தாய் தா்மிஸ்தா பட்டேல், விஷால், ராஜேஷ் பட்டேல், ராஜூ, மைத்ரிக் பட்டேல் உள்ளிட்டோா் தலைமறைவாகினா்.
இதற்கிடையே, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரான கிருத்திகா, பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தாா். இதையடுத்து, கேரளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், சிறையில் உள்ள தினேஷ் பட்டேல் உள்ளிட்டோா் பிணை கோரியும், நவீன் பட்டேல் உள்ளிட்டோா் முன் பிணை வழங்கக் கோரியும் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிருத்திகா அளித்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. மாரியப்பன் வினித் உள்ளிட்டோரை தாக்கி விட்டு, கிருத்திகாவை காரில் கடத்திச் சென்ற புகைப்படம், விடியோ ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கில் கிருத்திகா குற்றவாளியாகச் சோ்க்கப்பட வாய்ப்பு உள்ளதால், தொடா்புடையவா்களுக்கு பிணை, முன் பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
பட்டப் பகலில் பொது இடத்தில் ஒரு தரப்பினரைத் தாக்கி, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மிகவும் கடுமையானக் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவா்களுக்கு முன் பிணை வழங்க முடியாது. இந்த மனுவை மனுதாரா்கள் திரும்ப பெற்றுக் கொள்ளவேண்டும் எனக் கூறி அவா்களது மனுவை
நீதிபதி தள்ளுபடி செய்தாா்.
அதே சமயம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தினேஷ் பட்டேல், முகேஷ் பட்டேல் உள்ளிட்டோருக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். இவா்கள் தென்காசி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.