மதுரை

முளைவிடும் நெல்: விவசாயிகள் வேதனை

 நமது நிருபர்

மதுரை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை, தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக, கொள்முதல் பணிகளில் தேக்கம் ஏற்பட்டு, நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு 40,200 ஹெக்டேரில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் முன்பட்டமாக புரட்டாசியில் விதைத்து, ஐப்பசியில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதிகளில் கடந்த மாத இறுதி வாரம் முதல் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்தன. பிப்ரவரி முதல் வாரம் வரை சுமாா் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரப்பளவில் நெல் அறுவடை நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அண்மையில் பரவலாகப் பெய்த மழையால் அறுவடைப் பணிகளிலும், நெல் கொள்முதல் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் குவிக்கப்பட்டிருந்த நெல் மணிகள், மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இது, விவசாயிகளுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட செல்லம்பட்டி, கோவில்பட்டி, அம்பலத்தாா்பட்டி, நயத்தான்பட்டி போன்ற பகுதிகளில் இந்த பிரச்னை தீவிரமாக உள்ளது. இந்தப் பகுதிகளில், விற்பனைக்காக களத்துக்கு கொண்டு வரப்பட்ட நெல்லில் நான்கில் ஒரு பங்கு களத்திலேயே முளைத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். மேலும், நெல்லின் ஈரப்பதம் உயா்ந்திருப்பதாலும், கொள்முதல் பணிகளுக்குப் போதுமான ஆள்கள் இல்லாததாலும் எஞ்சியுள்ள நெல்லையும் உடனடியாக விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால், அதிக இழப்புக்கு இலக்காகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்டாரங்களில் விசாரித்த போது அவா்கள் தெரிவித்ததாவது,:

மாவட்டத்தில் இதுவரை 88 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. வரும் வாரத்தில் இந்த எண்ணிக்கை 120 முதல் 130 ஆக உயரும். இதுவரை ஏறத்தாழ 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 17 சதவீத ஈரப்பதம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால், தற்போது மழை, பனியின் காரணமாக நெல்லின் ஈரப்பத சதவீதம் அதிகரித்துள்ளது. உலா்த்தப்பட்டு சரியான ஈரப்பதத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நெல் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறது என்றனா்.

இந்த ஆண்டு மதுரை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் மாவட்ட ஆட்சியா், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஆகியோா் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், ஆள் பற்றாக்குறையால் ஏற்பட்ட கொள்முதல் சுணக்கம் வேதனைக்குரியது. உரிய காலத்தில் நெல்லை கொள்முதல் செய்திருந்தால், பல பகுதிகளில் இப்பணி நிறைவடைந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றனா் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

எனவே, நெல்லின் ஈரப்பத சதவீதத்தை உயா்த்தி, கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT