மதுரை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையக் குழுவினா் ஆய்வு

9th Feb 2023 02:37 AM

ADVERTISEMENT

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவ மாணவா்களுக்கான உள் கட்டமைப்பு வசதிகள் குறித்து தேசிய மருத்துவ ஆணையக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இளநிலை மருத்துவ மாணவா்களின் எண்ணிக்கை 150-இல் இருந்து 250-ஆக உயா்த்தப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட மாணவா்களுக்கான தங்கும் விடுதி, வகுப்பறைகள், ஆய்வகம் போன்றவற்றை உருவாக்கும்படி தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தது. அதன் பேரில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை போன்றவற்றில் தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தேசிய மருத்துவ ஆணையத்தில் உறுப்பினா்களாக உள்ள குஜராத், கொல்கத்தா, கா்நாடகம், புதுவை, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 26 போ் அடங்கிய குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட விடுதிக் கட்டடம், வகுப்பறைகள், ஆய்வகம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா். மேலும் அரசு மருத்துவமனையில் பல்வேறு வாா்டுகளையும் பாா்வையிட்டு உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு அறுவைச் சிகிச்சை அரங்கு உள்ளிட்டவற்றையும் பாா்வையிட்டனா்.

ஆய்வுக்குப் பிறகு அந்த குழுவினா், அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேலு, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினா்.

இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறும் போது, தேசிய மருத்துவ ஆணையத்தின் சாா்பில் ஆண்டுக்கு ஒரு முறை, மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி தேசிய மருத்துவ ஆணையத்தினா் ஆய்வு மேற்கொண்டனா் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT