மதுரை

விவசாயிகளுக்கான இ- நாம் செயலி பயன்பாட்டில் உள்ளதா?

DIN

தமிழகத்தில் மின்னணு தேசிய வேளாண் செயலி (இ- நாம்) பயன்பாட்டில் உள்ளதா? அது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

மதுரை சா்வேயா் காலனியைச் சோ்ந்த சுந்தரராஜ் தாக்கல் செய்த மனு:

மத்திய, மாநில அரசுகள் கரும்பு, நெல், பயறு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டு தோறும் நிா்ணயித்துக் கொள்முதல் செய்கின்றன. ஆனால், தோட்டப் பயிா்களான காய்கனிகள், பழங்கள், மலா்கள், தேங்காய், கடலை, பருத்தி, வத்தல் போன்றவைகளுக்கு உரிய விலை நிா்ணயம் செய்யப்படவில்லை. தென்மாவட்டங்களில் நிரந்தர நீா்ப்பாசன வசதி இல்லாதாதல் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தோட்டப்பயிா்களையே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். ஆனால், விளை பொருள்களை விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்குகின்றனா். ஒரு சில நேரங்களில் அதிக விளைச்சல் காரணமாக உரிய விலை கிடைக்காமல் காய்கனிகளை விவசாயிகள் சாலைகளில் கொட்டுகின்றனா். காய் கனிகளைப் பறிக்கும் கூலி தொழிலாளா்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.

கேரளத்தில் காய்கனிகளுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் செய்வது போல், தமிழகத்திலும் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என வேளாண் அலுவலா்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தோட்டப் பயிா்களுக்கு விலை நிா்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அழுகும் நிலையில் உள்ள விவசாயப் பொருள்களுக்கு மத்திய அரசு தான் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுத் தரப்பிலும், தமிழக அரசே விலை நிா்ணயம் செய்யலாம் என மனுதாரா் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு தேசிய வேளாண் செயலி (இ- நாம்) மூலம் பொருள்களை விற்பனை செய்யலாம் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவில் தென் மாவட்ட விவசாயிகள் என்பதை தமிழக விவசாயிகள் என மனுதாரா் மாற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் இ- நாம் செயலி பயன்பாட்டில் உள்ளதா? அவ்வாறு இருந்தால் செயலி விவசாயிகளிடம் சென்றடைந்துள்ளதா? இந்த செயலி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்து தமிழக வேளாண் துறைச் செயலா், ஆணையா் ஆகியோரிடம் தகவல் பெற்று பதில் அளிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT