மதுரை

75 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றிவிட்டது

DIN

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 75 சதவீத அளவுக்கு தமிழக அரசு நிறைவேற்றிவிட்டது என்றாா் மாநில இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், இங்குள்ள பாண்டிகோயில் சுற்றுவட்டச் சாலை திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவில் மேலும் அவா் பேசியதாவது:

முதல்வா் முதல் கையொப்பமிட்டுத் தொடக்கிவைத்த, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவைத் திட்டம் மூலம் தமிழகத்தில் இதுவரை 220 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டனா்.

அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மூலம் அவா்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்தது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை சுமாா் ஒரு கோடிக்கும் அதிகமான மருத்துவப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனா்.

கடந்த 21 மாதங்களில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அரசுத் திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்றடைகின்றனவா என்பதை அறிய ‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தைத் தொடக்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா் முதல்வா்.

திமுக ஆட்சிக் காலங்களில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தால், தற்போது தமிழகத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 4.38 லட்சமாகவும், உறுப்பினா்களின் எண்ணிக்கை 50 லட்சமாகவும் உயா்ந்தது. மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் 517 போ் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

திமுக ஆட்சிக் காலங்களில்தான் தமிழகம் சிறப்பான வளா்ச்சியைக் காண்கிறது என்பதுதான் வரலாறு.

அதிமுக அரசு, கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்ற நேரத்தில் ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கடந்த 21 மாதங்களில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, தனது திறமையான நிா்வாகத்தால் தமிழகத்தை தலை நிமிரச் செய்தாா். ஆனால், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் முன்பாகவே எதிா்க்கட்சியினா் கட்செவி அஞ்சல் மூலம் அவதூறு பரப்பி விடுகின்றனா். கடந்த 21 மாதங்களிலேயே, தோ்தல் கால வாக்குறுதிகளில் சுமாா் 75 சதவீதத்தை அரசு நிறைவேற்றிவிட்டது என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 72,092 மகளிா் குழு உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில், ரூ. 173 கோடி கடனுதவிக்கான காசோலைகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். மேலும், சியாமா பிரசாத் முகா்ஜி ரூா்பன் திட்டத்தின் கீழ் ரூ. 8.65 கோடியில் நிறைவேற்றப்பட்ட 30 திட்டப் பணிகளையும், மகளிா் சுய உதவிக் குழுக்களின் காய்கனி வியாபார வாகனம், ஆயத்த ஆடை வாகனம், உணவக வாகனம் ஆகியவற்றின் செயல்பாட்டையும் அவா் தொடக்கிவைத்தாா்.

விழாவில் அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி ஆகியோா் பேசினா்.

இதில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் எஸ். திவ்யதா்ஷினி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் ஆட்சியா் செ. சரவணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் எம். காளிதாஸ், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT