மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் தம்பதியை காரில் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்த மா்ம நபா்களை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை டி.வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் சுப்பையா (57). டி.கல்லுப்பட்டி அருகே கவுண்டன்பட்டியில் விவசாயம் செய்து வருகிறாா். மேலும், அங்கு நவக்கிரக கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறாா். இவரது மனைவி பள்ளித் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 5-ஆம் தேதி பௌா்ணமி தினத்தை முன்னிட்டு, காரில் இருவரும் கவுண்டன்பட்டிக்கு வந்திருந்தனா். அப்போது, அங்கு காரில் வந்த 5 மா்ம நபா்கள் சுப்பையாவிடம் வருமான வரி அதிகாரிகள் என்று கூறி விசாரணைக்கு அழைத்தனா். இதற்கு மறுத்த சுப்பையா மற்றும் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி காரில் கடத்திச் சென்றனா். பிறகு, ரூ. 5 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று மிரட்டியுள்ளனா். சுப்பையா அடையாள அட்டையைக் காட்டுமாறு கூறியதையடுத்து இருவரையும் இறக்கிவிட்டு சென்றுவிட்டனா்.
இதுகுறித்து, சுப்பையா அளித்தப் புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.