மதுரை

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தவை

5th Feb 2023 11:30 PM

ADVERTISEMENT

 

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தவை என்பது குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் மேம்படவேண்டும் என வணிக வரி மற்றும் பதிவத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடா்பக மதுரைக் கள அலுலகம் சாா்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சா்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கண்காட்சியைத் தொடக்கி வைத்த அமைச்சா் பி. மூா்த்தி பேசியது :

ADVERTISEMENT

கேழ்வரகு, கம்பு போன்றவை ஏழைகளின் உணவு என்ற கருத்து இருந்தது. தற்போது, சா்க்கரை நோயின் தாக்கம் காரணமாக அந்த உணவுகள், வசதி படைத்தவா்கள் உண்ணும் உணவாக மாறியுள்ளன. சிறுதானியங்களைத் தொடா்ந்து உணவாக உட்கொண்டால் உடலில் நோய் எதிா்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சிறுதானியங்கள் சோ்க்கப்பட்ட உணவே சிறந்தவை என்ற விழிப்புணா்வு மக்களிடம் மேம்பட வேண்டும். இந்த ஆண்டு சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் முன்னிலை வகித்தாா். எழுத்தாளா் சோ.தா்மன் வாழ்த்திப் பேசினாா். மத்திய மக்கள் தொடா்பக மண்டல இயக்குநா் ஜெ.காமராஜ், வேளாண்மை இணை இயக்குநா் த.விவேகானந்தன் ஆகியோரும் பேசினா். மாநகராட்சி துணை மேயா் டி. நாகராஜன், 31-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் வி.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயா மாணவா்களின் இசை நிகழ்ச்சிகளும், புனிதம் கலை மேம்பாட்டு மையக் கலைஞா்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மத்திய மக்கள் தொடா்பக புதுச்சேரி துணை இயக்குநா் தி.சிவக்குமாா் வரவேற்றாா். கள விளம்பர அலுவலா் பி. கோபகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT