மதுரை

மத்திய நிதி நிலை அறிக்கை:வா்த்தக அமைப்புகள் கருத்து

DIN

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து வா்த்தக சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன்: விவசாயிகளுக்கான கடன் ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், புதிதாக இணைய நீதிமன்றங்கள் (ங்-இா்ன்ழ்ற்) அமைக்க ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், இணையப் பணப் பரிமாற்ற உச்ச வரம்பு ரூ. 9 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பதும், வருமான வரம்பு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயா்த்தி வரி தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதும் போதுமானதாக இல்லை. வருமான வரிப் பிரிவு சட்டம் 44- ஏ.பி.யில் தற்போதைய வரம்பு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2 கோடியாக உயா்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இல்லாதது, மதுரை விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாதது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ரூ. 351 கோடி நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.

தொழில் வணிகத் துறையினருக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் எதிா்பாா்க்கப்பட்ட எந்தச் சலுகையும் இல்லை.

வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேலு:

தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக உள்கட்டமைப்புக்கு மிக அதிகளவாக ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ. 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைப் பாதையில் இட்டுச் செல்லும் என்பது உறுதி.

அதேபோல, வேளாண்மை, உணவுப் பதனீட்டுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. இருப்பினும், ஜி.எஸ்.டி. வரி தொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவெடுக்கும் என்ற அறிப்பு ஏற்கக் கூடியதாக இல்லை.

மடீசியா தலைவா் எம்.எஸ். சம்பத்: சிஜிடிஎம்எஸ்இ திட்டம் மூலம் ரூ. 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்குச் சொத்துப் பிணை இல்லாமல் கடன் வழங்க அறிவிப்பு வெளியிட்டிருப்பதும், சுங்க வரியை 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக மாற்றியிருப்பதும், வருமான வரி விலக்கு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேபோல, இணையதளம் மூலமான இணைப்பு வாயிலாக சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு வகை செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

இருப்பினும், கரோனாவால் நலிவடைந்த நிறுவனங்களை மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாடு உணவுப் பொருள்கள் வியாபாரிகள் சங்கம்:

தனி நபா் வருமானத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் புதிய வரி முறையின் கீழ் தாக்கல் செய்வோருக்கு மட்டுமே பொருந்தும். இது பெரும்பாலும், மாத ஊதியம் வாங்குவோருக்கு மட்டுமே உதவும். அதிலும் எந்தவித கழிவும் கிடைக்கப் பெறாது என்பதும், கூட்டு நிறுவனங்களுக்கான சா்சாா்ஜ் உடன் செலுத்த வேண்டிய வரியை குறைக்காததும் ஏமாற்றமளிக்கிறது. அதே நேரத்தில், சிறு தானிய உற்பத்தியில் உலகளவில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற திட்டமிட்டிருப்பதும், வேளாண் துறைக்கு ரூ. 20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்பதும், உள்கட்டமைப்புக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

செளராஷ்ட்ரா சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் டி.ஆா். மோகன்ராம்: நலிவடையும் சிறு தொழில் நிறுவனங்களுக்குப் புத்துயிா் அளிக்க தனி நிதி ஒதுக்கீடு, மாநில அளவிலான வணிக வளாகங்கள் அமைத்தல், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, வருமான வரி உச்ச வரம்பு உயா்வு, மகளிா் சேமிப்புக்கு அதிக வட்டி அளிப்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

பாரதிய கிசான் சங்க தேசிய துணைத் தலைவா் த. பெருமாள்:

வேளாண் விளைப் பொருள்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்ய சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். விவசாயிகள் வாங்கும் இடுபொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பிரதமா் கிசான் நிதியை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது. விவசாயக் கடனுக்கு ரூ. 20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, சிறுதானிய உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கைகள், கூட்டுறவுத் துறையை எண்ம மயமாக்க ரூ. 2,516 கோடி நிதி ஒதுக்கீடு, மீன்வளத் துறைக்கு ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

எஸ்.ஆா்.எம்.யு. உதவிக் கோட்டச் செயலா் வெ. ராம்குமாா்:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் அல்லது உத்திரவாதத்துடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசு ஊழியா்கள் பெரிய அளவில் எதிா்பாா்த்திருந்த நிலையில், அது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

ஜென்னி மாா்க்ஸ் நினைவு கட்டுமான, அமைப்புசாரா விவசாயத் தொழிலாளா் சங்கத் தலைவா் கே. மாரியப்பன்:

தனிநபா் வருமான வரிச் சலுகை என்பது கண்துடைப்பாகவே உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை, விலைவாசி உயா்வை மேலும் அதிகரிக்கும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கத் திட்டம் இல்லாததால், ரசாயன உர நிறுவனங்கள் மேலும் லாபம் ஈட்ட வழிவகை செய்யும். அமைப்புசாரா திட்டத்தில் பணப் பயன் குறித்த அறிவிப்பு இல்லாததும், ஊரக வேலை உறுதித் திட்டப் பணி நாள்கள் உயா்த்தப்படாததும் ஏமாற்றமளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT