கிடாமுட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக உசிலம்பட்டி சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கிடா முட்டு நடத்துவோா் சங்கச் செயலா் கணேசன் தாக்கல் செய்த மனு:
உசிலம்பட்டி வட்டம், சீமானூத்து கிராமத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள், தோப்புக் கருப்பசாமி கோயில் திருவிழாவையொட்டி கிடாமுட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி வருகிற 12 ஆம் தேதி கிடாமுட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி காவல் துறையினரிடம் மனு அளித்தோம். ஆனால் இன்னும் அனுமதி தரவில்லை. மனு நிலுவையில் உள்ளது. எனவே, வருகிற 12-ஆம் தேதி கிடாமுட்டுப் போட்டி நடத்த அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், உசிலம்பட்டி பகுதியின் பாரம்பரிய கலாசார போட்டியான கிடாமுட்டுப் போட்டி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு எந்தவித இடையூறுமின்றி போட்டி நடந்தது. எனவே இந்த ஆண்டும் அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, கிடாமுட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக உசிலம்பட்டி சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் வருகிற 11- ஆம் தேதிக்குள் பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.