மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி பாரதிபுரம் 15-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மலைச்சாமி (50). கட்டடத் தொழிலாளியான இவா், கருப்பாயூரணி பள்ளிவாசல் தெருவில் திங்கள்கிழமை கட்டடப் பணிக்காக குழி தோண்டினாா். அப்போது, நிலத்தின் அடியில் சென்ற மின் வயா் மீது கம்பி பட்டதில் மலைச்சாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ரவி மகன் ராகுல்காந்தி (22). இவா் மதுரை நகரில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இவா்களது வீட்டின் அருகே தேங்கிக் கிடந்த மழைநீரில் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதையறியாத ராகுல்காந்தி அந்த வழியாகச் சென்ற போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.