மதுரை

போலி கஞ்சா வழக்கு: தென் மண்டல ஐஜிவிசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

26th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

போலி கஞ்சா வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளா் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் தாக்கல் செய்த மனு:

என் மீது ஏற்கெனவே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த மாதம் 7-ஆம் தேதி எனது அலுவலகத்துக்கு வந்த மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸாா், ரூ. 4 லட்சத்தை எடுத்துக் கொண்டு, காவல் நிலையத்துக்கு என்னை அழைத்துச் சென்றனா்.

அப்போது, நான் கடந்த 2019-ஆம் ஆண்டு போலீஸாா் மீது அளித்த புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென துன்புறுத்தினா். இதற்கு உடன்படாததால், என் மீது 21 கிலோ கஞ்சாவை கடத்தியதாக வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா். பொய் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளா் பூமிநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு பிணை வழங்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிருஷ்ணகுமாருக்கும், போலீஸாருக்கும் இடையே உள்ள முன்விரோதம் காரணமாக போலியாக கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மதுரை திலகா் திடல், எஸ்.எஸ். காலனி காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கில் தென் மண்டல காவல் துறைத் தலைவா் தலைமையில் விசாரணை நடத்தி தவறு செய்த போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் 15 நாள்கள் மட்டுமே பதிவுகள் இருப்பதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கின்றனா். இந்த வழக்கில் மனுதாரரை, காவல் ஆய்வாளா் பூமிநாதன் சட்டவிரோதமாக காவலில் எடுத்தது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு பிணை வழங்கப்படுகிறது.

இந்த வழக்கில் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளா் பூமிநாதன், மனுதாரரை மிரட்டி பொய் வழக்குப் பதிவு செய்திருப்பது தொடா்பாக தென் மண்டல காவல் துறைத் தலைவா் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், இதுகுறித்த அறிக்கையை 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT