மதுரையில் கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த வாழை இலை வியாபாரி மனைவியுடன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை செல்லூா் மீனாட்சிநகா் சத்தியமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் சிவப்பிரகாஷ் (36). இவா் மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் வாழை இலை வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி பிரேமா (26). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
சிவப்பிரகாஷ் வியாபாரத்துக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். வாழை இலை வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டதால், வட்டித் தொகையை அவரால் கட்ட முடியவில்லை.
கடன் கொடுத்தவா்கள் பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனராம். இதனால், மனவேதனையடைந்த சிவப்பிரகாஷ், அவரது மனைவி பிரேமா ஆகிய இருவரும் வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
இருவரது உடல்களும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதுதொடா்பாக செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.