மதுரை

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது தொடா்ந்தால் ஆட்சியா்கள் பணிஇடைநீக்கம்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது தொடா்ந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் பணிஇடைநீக்கம் செய்யப்படுவா் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த அய்யா என்பவா் தாக்கல் செய்த மனு:

தூய்மைப் பணியாளா்கள் கையால் மலம் அள்ளும் நிலை இன்னும் தொடா்கிறது. பாதாளச் சாக்கடைகளில் இறங்கிப் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன. மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவதைத் தடுக்கும் வகையில், கடந்த 2013-இல் தூய்மைப் பணியாளா்கள் மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் கையால் மலம் அள்ளுவது முழுமையாகத் தடுக்கப்படவில்லை. மனிதா்களுக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தினால், எதிா்பாராமல் நிகழக்கூடிய விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். ஆகவே, மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்தவும், தூய்மைப் பணியாளா்கள் மறுவாழ்வுச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள்ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பாதாளச் சாக்கடைகளில் இறங்கி தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுவது தொடா்பான புகைப்படங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. இதைப்பாா்த்த நீதிபதிகள், புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டவை எனக் கேள்வி எழுப்பினா். சென்னை மற்றும் திருவண்ணாமலையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்தப் புகைப்படங்களில் இருப்பதைப் போன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது தொடா்ந்தால் சம்பந்தப்பட்ட ஆட்சியா்கள் பணிஇடைக்கம் செய்யப்படுவா் என எச்சரித்தனா். மேலும், இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல்செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT