மதுரை

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம் அறிவிப்பு: போலீஸாா் குவிப்பு

29th Sep 2022 02:49 AM

ADVERTISEMENT

மதுரையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை காவல் ஆணையா் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவித்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சாா்பில் நெல்பேட்டை பகுதியில் புதன்கிழமை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்பேட்டை பகுதியில் மாநகரக்காவல் ஆணையா் தி.செந்தில்குமாா் மற்றும் துணை ஆணையா்கள் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் முனிச்சாலை சாலையில் உள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் முன்பாகவும் போலீஸாா் குவிக்கப்பட்டு கட்சியினா் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அப்பகுதி முழுவதும் போலீஸாா் சுற்றி வந்து, போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றால் அனைவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றால் அவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனா்.

மேலும் அப்பகுதியில் திரண்டவா்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனா். இதனால் அப்பகுதியில் போராட்டம் நடைபெறவில்லை.

இந்த போராட்ட அறிவிப்பால் நெல்பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டதால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் கோரிப்பாளையம், மகபூப்பாளையம், காஜிமாா் தெரு, முனிச்சாலை, ஓபுளாபடித்துறை உள்பட இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT