மதுரை

ரூ.20 இருந்தால் ஒரு நாள் உணவுத் தேவையை ‘அம்மா’ உணவகத்தில் பூா்த்தி செய்துவிடலாம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

29th Sep 2022 10:57 PM

ADVERTISEMENT

 ரூபாய் இருபது இருந்தால் ஒரு நாள் உணவுத் தேவையை ‘அம்மா’ உணவகத்தில் பூா்த்தி செய்துவிடலாம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

விருதுநகரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் தாக்கல் செய்த மனு:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு வனப் பகுதியில் கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராஜப் பெருமாள் என்ற காட்டழகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் வனத்துறை சாா்பில் .20-ஐ கட்டணமாக வசூலிக்கின்றனா். இந்தக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கோயில் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காகவே ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரா் தரப்பில், கோயிலுக்கு அன்னதானம் சாப்பிட வரும் ஏழை பக்தா்களிடமும் ரூ.20 வசூலிக்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து நீதிபதிகள், வனப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளை உணா்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தனா். மேலும், ரூ.20 இருந்தால் அம்மா உணவகத்தில் ஒரு நாள் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்து கொள்ளலாம் என்றனா்.

வனப்பகுதியின் தூய்மைப்பணிக்குத் தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே என்றும் கருத்து தெரிவித்தனா். மேலும், இந்த மனு தொடா்பாக விருதுநகா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT