மதுரை

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குவாரி நடத்துவதாகப் புகாா்:ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையத்தை நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

28th Sep 2022 04:44 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அனுமதியின்றி குவாரி நடத்துவதாக அரசுத் தரப்பில் விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய கோரிய வழக்கில் வழக்குரைஞா் ஆணையத்தை நியமித்து ஆய்வு செய்யுமாறு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த முருகேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே வாதனக்குறிச்சி கிராமத்தில் எனது நிலத்தில் நானும், எனது மனைவியும் மணல் குவாரி மற்றும் கிரஷா் யூனிட் ஒன்றை நடத்தி வருகிறோம். இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, அனுமதியின்றி எனது குவாரி செயல்படுவதாகப் புகாா் அளிக்கப்பட்டு, உரிய விளக்கம் கேட்டு அரசுத் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எனது குவாரி சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் உரிய அனுமதியோடுதான் செயல்பட்டு வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இடமானது ஒரு குளமாகும். இங்கு எனது வாகனம் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்த இடத்தில் வேறுசில நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். எனவே, எனக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன். ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரிடம் விளக்கம் கேட்டு அரசு தரப்பில் அனுப்பிய நோட்டீஸ் மீது தற்போதைய நிலையே தொடர வேண்டும். இதுதொடா்பாக வழக்குரைஞா் ஆணையத்தை நியமித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT