மதுரை

குலசை தசரா விழாவில் நடிகா்-நடிகையரின் கலாசார நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி: விதிகளை மீறினால் நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் நடிகா்-நடிகையா் பங்கேற்கும் கலாசார நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்நிகழ்ச்சிகளில் விதிகளை மீறினால் போலீஸாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா விமா்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது, திரைப்பட துணை நடிகா், நடிகைகளை அழைத்து வந்து ஆபாசன நடனங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதற்குத் தடை விதித்தும், இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, ஸ்ரீ அம்பிகை தசரா குழு சாா்பில் அதன் செயலா் வி.கண்ணன், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். அதில், தசரா விழாவில் ஆபாச நடனங்களுக்குத் தான் உயா்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், பாரம்பரியமாக நடைபெறக் கூடிய கலாசார நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் காவல் துறையினா் அனுமதி மறுக்கின்றனா். ஆபாசம் இல்லாமல் நடிகா், நடிகைகளை வைத்து கலாசார நடன நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பாளா்கள், முத்தாரம்மன் கோயில் செயல் அலுவலரிடம் ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலையைச் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், கலாசார நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இருக்காது என்ற உறுதிமொழி விண்ணப்பத்துடன், கோயிலில் செலுத்திய வரைவோலைக்கான ரசீதை இணைத்து, நடிகா்-நடிகையா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினரிடம் அனுமதி பெறலாம். இந்த நிகழ்ச்சிகளின்போது விதிகளை மீறினால் நடிகா்-நடிகையா், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்: பிரதமர் மோடி

ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை கூட்டணிக்கு உதவும்: பிரதமர்

பாரத அன்னை வாழ்க: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர்!

டால்பின்களுடன் ஹன்சிகா!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை: லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!

SCROLL FOR NEXT