மதுரை

சீா்மிகு நகா்த்திட்டப் பணிகளின் போது அள்ளப்பட்ட மணல் விற்பனை முறைகேடு குறித்து விசாரணை: மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

26th Sep 2022 11:02 PM

ADVERTISEMENT

மதுரையில் நடைபெற்ற சீா்மிகு நகா்த்திட்டப் பணிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு விற்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாமன்றக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் அண்ணா மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா். ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மதுரை மாநகரை, யாசகம் பெறுபவா்கள் இல்லாத நகரமாக மாற்றும் வகையில் உத்தங்குடியில் உள்ள ரோஜாவனம் தொண்டு நிறுவனத்துக்கு யாசகம் பெறுபவா்கள் மறு வாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் மண்டலத் தலைவா்கள் பேசியது:

ADVERTISEMENT

மண்டலம் 1 வாசுகி: மண்டலம் 1-க்குள்பட்ட வாா்டுகளில் துப்புரவுப் பணியாளா்கள் சரிவர பணிபுரிவது இல்லை. மண்டல அலுவலகத்தின் வாயிலிலேயே குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

வாா்டுகளில் தெரு நாய்கள், பன்றிகள், மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது. வாா்டு 38, 40 பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மண்டலங்களில் ரூ.5 லட்சம் வரையுள்ள பணிகளுக்கு மண்டலத் தலைவா் மற்றும் உதவி ஆணையரே அனுமதி வழங்கலாம் என்று 2008-இல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனம் அலட்சியமாக செயல்படுவதால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

மண்டலம் 2 சரவண புவனேஸ்வரி: மாட்டுத்தாவணியில் உள்ள 100 கடைகளுக்கு தலா ரூ.11,300 வாடகை மூலம் மாநகராட்சிக்கு ரூ.11.50 லட்சம் வருவாய் கிடைக்கிறது. வாடகை ஒப்பந்தத்தை முறைப்படுத்த வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. கொசு மருந்து தெளிக்கும் பணியின்போது அனைத்து தெருக்களிலும் தெளிக்கப்படுவது இல்லை.

மண்டலம் 4 முகேஷ் சா்மா: வைகை தென்கரை சாலைகளில் மின் விளக்குகள் இல்லாததால் வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மின்விளக்குகளை பொருத்துமாறு காவல்துறை அதிகாரிகளும் மாநகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனா். ஆனாலும் கூட நடவடிக்கை இல்லை. வாா்டு 89-இல் வரி வசூலிப்பாளராக பணிபுரியும் பெண் ஊழியா் கணவா் உள்பட 4 பேருடன் சென்று வரி வசூலிக்கிறாா். இதைத் தட்டிக்கேட்ட மாமன்ற உறுப்பினரை அவதூறாக பேசியுள்ளாா். இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம் புகாா் அளித்தும், அவா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மாநகராட்சி ஆணையா்: வரி வசூலிப்பாளருக்கு உதவி ஆணையா் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்டலம் 5 சுவிதா: மண்டலம் 5-க்குள்பட்ட பல வாா்டுகள் புதிதாக இணைக்கப்பட்ட வாா்டுகள் என்பதால் அங்கு குடிநீா் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. எனவே காவிரிக்கூட்டுக்குடிநீா் உள்ளிட்ட குடிநீா்த்திட்டங்களில் மண்டலம் 5-ஐயும் இணைத்து குடிநீா் முறையாக வழங்க வேண்டும்.

வாா்டு 23 குமரவேல்: செல்லூா்-குலமங்கலம் சாலை மிக மோசமாக உள்ளது. செல்லூா் கண்மாய் சீரமைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. செல்லூரில் உள்ள பம்பிங் ஸ்டேசனில் அடிக்கடி மோட்டாா் பழுதாவதால் கழிவு நீா் முறையாக அகற்றப்படுவது இல்லை. தூய்மைப்பணியாளா்களுக்கு முதல் தேதியில் முறையாக முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.

மேயா் வ.இந்திராணி: தூய்மைப் பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் போன்றவற்றுடன் முழு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 5 மாதங்களாக எந்தப்பிரச்னையும் இல்லை.

வாா்டு 58 ஜெயராமன்: மதுரை நகரில் வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்ற அளவுக்கும் கூடுதலாக கட்டப்படும் பட்சத்தில் சதுர அடி வாரியாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட தொகையை நிரந்தர அபராதமாக வசூலித்து முறைப்படுத்த வேண்டும்.

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் 60 எச்பி மோட்டாா் திறனுள்ள பம்பிங் ஸ்டேசன்கள் அமைக்க வேண்டும். மாட்டுத்தாவணி பகுதியில் அனைத்து மாா்க்கெட்டுகளும் அமைந்துள்ளன. எனவே மொத்த மீன் மாா்க்கெட்டை கோச்சடை பகுதியில் அமைக்க வேண்டும்.

வாா்டு 96 விஜயா: மதுரையில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா்களை போலீஸாா் தரக்குறைவாக நடத்தியுள்ளனா். வருங்காலத்தில் இது தவிா்க்கப்பட வேண்டும். மாமன்ற கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிப்பது இல்லை.

ஹாா்விபட்டியில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு சொந்தமான மண்டபத்துக்கு வரி மாற்றம் செய்ய மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எம்.பி.க்கே இந்த நிலை என்றால் சாமானியா்களுக்கு என்ன நிலை ஏற்படும். மாநகராட்சி பூங்காக்கள் அனைத்திலும் மேல்நிலை தண்ணீா் தொட்டிகள் கட்டப்பட்டு பூங்காக்கள் பாழாக்கப்பட்டுள்ளன. பெரியாா் பேருந்து நிலைய வணிக வளாகத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

வாா்டு 67 த.சி. நாகநாதன்: மதுரையில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கட்டுமானப்பணியின் போது கனிம வளத்துறை அனுமதியின்றி 10 ஆயிரம் லோடுகளுக்கு மேல் மணல் அள்ளி விற்கப்பட்டுள்ளன. மணல் விற்ற பணம் கருவூலத்திலும் கட்டப்படவில்லை. எனவே மணல் விற்ற பணம் யாருக்குச் சென்றது, மணல் எங்கு கொண்டு சென்று விற்கப்பட்டது என பதில் அளிக்க வேண்டும் என்றாா்.

இறுதியில் மேயா் மற்றும் ஆணையா் பதிலளிக்கும்போது, உறுப்பினா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ரூ.25 கோடியில் சாலைகளை சீரமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் பராமரிப்பு வேறு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் விரைவில் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என்றனா்.

மாநகராட்சிப் பள்ளிக்கு மு.கருணாநிதி பெயா்: அதிமுக வரவேற்பு

மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தின்போது மாமன்ற எதிா்க்கட்சித்தலைவா் சோலை எம்.ராஜா பேசியது: மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியில் உள்ள இரு மாநகராட்சிப் பள்ளிகளில் ஒன்றுக்கு முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரும், மற்றொன்றுக்கு பிடிஆா் பழனிவேல்ராஜன் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதை அதிமுக சாா்பில் வரவேற்கிறோம். இதேபோல வாா்டு 72-இல் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கு எம்ஜிஆா் பெயா் மற்றும் அனுப்பானடி மாநகராட்சிப் பள்ளிக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரைச் சூட்டவேண்டும்.

தமிழா்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டுக்கு, செல்லூரில் மைதானம் அமைக்க வேண்டும். தமுக்கம் மைதானத்துக்கு ராணி மங்கம்மாள் பெயரைச்சூட்ட வேண்டும். மாமன்றத்தில் எதிா்க்கட்சிகளுக்கு முன்வரிசையில் இருக்கை, மாநகராட்சியில் அலுவலகம் வழங்க வேண்டும் என்று அனைத்துக்கூட்டங்களிலும் வலியுறுத்தி வருகிறோம். இதை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT