மதுரை

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோா் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது: தென்மண்டல ஐ.ஜி.

26th Sep 2022 12:08 AM

ADVERTISEMENT

பெட்ரோல் குண்டுவீசுவது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோா் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவா் என்று தென்மண்டல ஐஜி அஸ்ராகாா்க் தெரிவித்தாா்.

மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைபட்டியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒரு காா், 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்த சிக்கந்தா் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தென்மாவட்டங்களில் 24 மணி நேரமும் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தற்போதைய சூழலில் தென்மாவட்டங்களில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் 20 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

பெட்ரோல் குண்டுவீசுவது, கல்வீசுவது, தீ வைப்பது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம்- ஒழுங்கை சீா்குலைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேவைப்படும்பட்சத்தில் அவா்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாா்கள்.

ADVERTISEMENT

முக்கிய பிரமுகா்கள், அரசியல் கட்சியினரின் வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் இயங்கி வரும் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது ஊரகக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT