மதுரை

பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகள் பட்டியலை தாக்கல் செய்ய உயா்நீமன்றம் உத்தரவு

26th Sep 2022 11:03 PM

ADVERTISEMENT

பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசின் அங்கீகாரத்தைப் பெறாமல் சட்டவிரோதமாக மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன. அங்கீகாரம் பெறாத மனைகளை, மக்களிடம் மோசடியாக விற்பனை செய்வதோடு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருகின்றனா்.

உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனச் சட்டம் உள்ளது. ஆனால், இந்த சட்ட விதிகளைப் பின்பற்றாமல் தேனி சாா்-பதிவாளா், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளாா். இத்தகைய பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட பதிவுத்துறை அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சரவணன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சாா்-பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி, சாா்-பதிவாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். முந்தைய விசாரணையின்போது இந்த தகவல் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்வதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பத்திரப் பதிவு சட்டத் திருத்தம் 22- ஏ அமலுக்கு வந்த 2016 அக்டோபா் 20 முதல் தற்போது வரை, பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகள் குறித்த விவரத்தை பட்டியலாகத் தாக்கல் செய்ய வேண்டும் என பதிவுத் துறை தலைவருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT