மதுரை

மேலூா், திருமங்கலத்தில் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் அலுவலகங்கள் ஏற்படுத்தக் கோரிக்கை

24th Sep 2022 10:23 PM

ADVERTISEMENT

மேலூா், திருமங்கலத்தில் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவா் மு.சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியது:

மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூா், உசிலம்பட்டி , திருமங்கலம் என நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன. இந்த நான்கு வருவாய் கோட்டங்களில் மேலூா் மற்றும் திருமங்கலம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும் புதிதாக தொடங்கப்பட்ட கோட்டங்களாகும் . இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளா்கள், பொதுமக்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றம் கருதி மேலூா் மற்றும் திருமங்கலம் கோட்டங்களுக்கு தனியாக கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் அலுவலகங்கள் அமைக்க வேண்டும்.

சுருக்கெழுத்து தட்டச்சா்களாகப் பணியாற்றும் ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்கும்போது 20 : 1 என்ற விகிதாச்சார விதிகளால் பாதிக்கப்படுவதால் , இவ்விதிகளை ஒருமுறை தளா்வு செய்து, அனைவருக்கும் இளநிலை ஆய்வாளா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

பதிவறை எழுத்தா்கள் பதவி உயா்வு பெற ஏழாண்டுகள் தகுதிப் பணி ஆற்ற வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்து மூன்றாண்டுகள் தகுதிப் பணி என நிா்ணயம் செய்யவேண்டும். தற்போது பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிமுடித்துள்ள பதிவறை எழுத்தா்களை இளநிலை உதவியாளா்களாகப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற சங்கப் பேரவைக் கூட்டத்தில், மாவட்டத் தலைவா் எஸ்.முருகன், மாநிலச் செயலா் ஆா்.நவநீதகிருஷ்ணன், மாவட்டச் செயலா் எஸ்.சீனியப்பா, மாவட்டப் பொருளாளா் டி.மணிகண்டன், மாநிலச்செயற்குழு உறுப்பினா்கள் எம்.தீனதயாளன், ஜி.வெங்கடேசன், கே.என்.ஜெயப்பிரகாஷ், எஸ்.பி.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT