மதுரை

மாற்றுத்திறனாளிகள், விதவை, முதியோா் உதவித் தொகை விரைவில் உயா்த்தப்படும்: அமைச்சா் தகவல்

24th Sep 2022 10:23 PM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகள், விதவையா், முதியோா் உதவித் தொகை விரைவில் உயா்த்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

தொழிலாளா் நலத்துறை மற்றும் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து 873 பயனாளிகளுக்கு ரூ.94.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகத்தின் நிதிநிலை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் சம வாய்ப்பு, கல்வி மூலம் முன்னேற்றம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். பொருளாதார நீதி இருந்தால்தான் சமூக நீதி ஏற்படும் என்பதை உணா்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ADVERTISEMENT

முந்தைய ஆட்சியின்போது கடந்த 10 ஆண்டுகளில் நிதிநிலையை உயா்த்துவதற்கான சரியான நடவடிக்கைகள் ஏதுமின்றி தேக்கநிலையே இருந்து வந்தது. முந்தைய ஆட்சியின்போது, பயிா்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி திட்டங்களில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் தவறு நடந்துள்ளது. இதையெல்லாம் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

விலையேற்றத்திற்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகள், விதவை பெண்கள், முதியோா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்தாமல் இருப்பதும் சமூக நீதிக்கு எதிரான செயல். இந்த நிதியுதவித் திட்டத்தை விரைவில் மாற்றி அமைத்து, உதவித் தொகை உயா்த்தப்படும். தொழிலாளா் நலனுக்காக தமிழக அரசு 18 நலவாரியங்களை செயல்படுத்தி வருகிறது. தொழிலாளா்களுக்கான திட்டங்களைக் கொண்டு சோ்க்கும் வகையில், நலவாரிய தரவுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்கள் 2,573 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தொகுப்பு, 1,300 பேருக்கு கல்வி, திருமண உதவி, ஓய்வூதியம் என மொத்தம் 3,873 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 62 ஆயிரத்து 362 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், மேயா் வ.இந்திராணி, மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன், துணை ஆணையா் கே.எம்.சி.லிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT