மதுரை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தொடக்கம்

24th Sep 2022 10:22 PM

ADVERTISEMENT

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாமை தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மதுரை மாநகராட்சி 4 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்கள் வாரியாக சனிக்கிழமை தொடங்கி அக்.12 ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெறும். மதுரையில் ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கான முகாமை சனிக்கிழமை தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியது: நலத்திட்ட உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கைக்கும், அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிக்கும் இடைவெளி இருந்து வருகிறது. இதைக் குறைக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பதிவு செய்பவா்களுக்கு கண்டிப்பாக நலத்திட்ட உதவி வழங்கப்படும்.

பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பயனாளிகள் குறித்த தகவல் தொகுப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைமுறை எனது தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசு நலத்திட்டங்களும், சிலருக்கு தனிப்பட்ட முறையிலும் உதவிகளைச் செய்து வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், துணை மேயா் தி.நாகராஜன், மதுரை கோட்டாட்சியா் சுகி பிரேமலா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக பரிசோதனை மற்றும் அளவீடு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் 791 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT