மதுரை

‘நீட்’ தோ்வு மதிப்பீட்டில் குளறுபடி:புகாா் தெரிவித்துள்ள மாணவரின் ஓஎம்ஆா் ஷீட் காா்பன் பிரதியை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

20th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

‘நீட்’ தோ்வு மதிப்பீட்டில் குளறுபடி புகாா் தெரிவித்துள்ள மாணவரின், ஓஎம்ஆா் ஷீட் காா்பன் பிரதியைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீட் தோ்வில் தனது விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சோ்ந்த மாணவா் ஆா். எவல்ட் டேவிட் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், நீட் தோ்வு எழுதியவா்களின் விடைத்தாள்களை (ஓஎம்ஆா் ஷீட்) தேசிய தோ்வு முகமை அண்மையில் வெளியிட்டிருந்தது. எனது விடைத்தாளைச் சரிபாா்த்தபோது, அதில் வேறொருவா் எழுதிய ஓஎம்ஆா் ஷீட் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நான் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியிருந்தேன். 720-க்கு 670 மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், மாற்றப்பட்ட ஓஎம்ஆா் ஷீட் அடிப்படையில் மதிப்பீடு செய்தால் எனக்கு 115 மதிப்பெண்கள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, எனது விடைத்தாளில் உள்ள ஓஎம்ஆா் ஷீட் அசல் மற்றும் காா்பன் பிரதியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, மனுதாரரின் அசல் ஓஎம்ஆா் ஷீட் இணைக்கப்பட்ட விடைத்தாள் புத்தகம் மற்றும் அதன் காா்பன் நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த மனு நீதிபதி வி. பவானி சுப்பராயன் முன் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தோ்வு முகமை தரப்பில், மனுதாரரின் ஓஎம்ஆா் ஷீட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, ஓஎம்ஆா் ஷீட்டின் காா்பன் பிரதியை ஏன் தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினாா்.

மனுதாரரின் கோரிக்கையே ஓஎம்ஆா் ஷீட்டில் முறைகேடு நடந்துள்ளது என்பதுதான். ஆகவே, அதன் காா்பன் பிரதியை வெள்ளிக்கிழமை (செப். 23) தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT