மதுரை

தமிழகத்தில் முன்மாதிரியாக கீழடி அருங்காட்சியகம் திகழும்: எம்.பி.

18th Sep 2022 11:03 PM

ADVERTISEMENT

தமிழகத்திலேயே முன்மாதிரி அருங்காட்சியமாக கீழடி அருங்காட்சியகம் திகழும் என்று மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாழ்வு முகாம் நடத்துவது தொடா்பாக ஆட்சியா் அலுவலக அதிகாரிகளுடன், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் கனவுத்திட்டம் டைடல் பாா்க். 16 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான டைடல் பாா்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கு பிறகு எந்த விதமான தொழில் அறிவிப்பும் இல்லை.

தற்போது 10 ஏக்கா் பரப்பளவில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் ரூ.600 கோடியில் டைடல் பாா்க் அமைக்கப்படும் என்பது தென் மாவட்ட இளைஞா்களின் வேலை வாய்ப்புக்கு ஒரு தலைமுறைக்கு பின் அறிவிக்கப்பட்ட பெரிய அறிவிப்பாக உள்ளது. இதுஇளைஞா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் முதல்வரை சந்தித்து அளித்த 21 கோரிக்கைகளில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மதுரை மத்திய சிறைச்சாலை இடமாற்றம், சிப்காட் அமைத்தல், தொழில் நுட்பப் பூங்கா அமைப்பது உள்ளிட்டவை குறித்து முதல்வா் நடவடிக்கை எடுத்துள்ளாா். மதுரையின் அடிப்படை கட்டமைப்புகளான சாலை, குடிநீா், வடிகால் அமைப்புகளை சரி செய்ய விரைவில் நல்ல அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் என நம்புகிறேன்.

கீழடி அருங்காட்சியகப் பணிகள் தொடா்பாக, ஒவ்வொரு முறை மதுரை வரும் போதும் முதல்வா் விசாரிக்கிறாா். கீழடி அருங்காட்சியகப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலேயே முன்மாதிரியான அருங்காட்சியமாக கீழடி அருங்காட்சியகம் அமையும். விரைவாக கீழடி அருங்காட்சியகத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

முதல்வா் அதை திறந்து வைப்பாா். கீழடி அகழாய்வில் சனிக்கிழமை கிடைத்துள்ள தங்கத்திலான மணி மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. பத்தாண்டு கீழடி அகழாய்வு நடைபெறும் நிலையில், பத்தாண்டுக்கு பிறகும் புதிய புதிய பொருள் கிடைத்து வருவது வியப்பை ஏற்படுத்துகிறது. பெரும் நாகரீகத்தின், பெரும் நகரத்தின் அமைவு கீழடி என சொன்னது சான்றுகளாய் கிடைத்து வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT