மதுரை

அலங்காநல்லூரில் 2024-க்குள் ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சா் எ.வ.வேலு

18th Sep 2022 11:03 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே 2024-க்குள் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

அலங்காநல்லூா் அருகே கீழக்கரை பகுதியில் வயித்துமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ள இடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் எ.வ. வேலு செய்தியாளா்களிடம் கூறியது: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அலங்காநல்லூா் பகுதியில் மைதானம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தாா். அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக பிரம்மாண்ட மைதானம் அமைக்க ஏதுவான இரண்டு இடங்களை தோ்வு செய்து அதனை முதல்வரிடம் தெரிவித்தோம். அலங்காநல்லூா் பகுதியின் அருகிலேயே ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அலங்காநல்லூா் பகுதியில் அரசின் மேய்ச்சல்கால் புறம்போக்கு 66 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 16 ஏக்கா் தேவைப்படும். அங்கு என்னென்ன அனுமதிகள் தேவையோ அவற்றை எல்லாம் பெற்று பணி தொடங்கப்படும். வனப்பகுதியை ஒட்டிய அரசு இடமாக இருந்தாலும், எந்த சூழலிலும் வன நிலத்தை அரசு கையகப்படுத்தாது. மலையில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்கும் வகையில் இந்த 66 ஏக்கா் உள்ளேயே குளம் ஒன்றும் உள்ளது.

ADVERTISEMENT

பயனாளிகள் மற்றும் விளையாட்டு வீரா்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தையும் சீரமைத்து அழகுறச் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் அமையும் போது குளமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முதல்வரின் அனுமதியும், நிா்வாக ஒப்புதலும் பெற்று விரைந்து திட்ட மதிப்பீடு தயாா் செய்து, 16 ஏக்கரில் மண் பரிசோதனை செய்து, இதை சமப்படுத்தி சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டு தொடா்ந்து பணிகள் நடைபெறும். 2024 ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன் அடிப்படையில் இரவு, பகல் பாா்க்காமல் பணிகள் நடைபெறும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல் மற்றும் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகளையும் அமைச்சா் எ.வ. வேலு பாா்வையிட்டாா். ஆய்வின்போது மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேலு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT