மதுரை

58 கிராமக் கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை பிறப்பிக்க உசிலம்பட்டி விவசாயிகள் எதிா்பாா்ப்பு

9th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

வைகை அணையில் இருந்து 58 கிராமக் கால்வாயில் தண்ணீா் திறக்க நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி வட்டம், திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை வட்டங்களில் உள்ள 33 கண்மாய்கள் பாசனம் பெறும் வகையில் 58 கிராமக் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, தேனி மாவட்டம் வைகை அணை நிரம்பி, வெளியேற்றப்படும் உபரி நீரை, கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென வைகை அணையின் வலது கரையில் மதகு அமைக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து 27 கிமீ செல்லும் பிரதான கால்வாய், உத்தப்பநாயக்கனூரில் 2 ஆகப் பிரிந்து இடதுகால்வாய் 11.9 கிமீ-க்கும், வலது கால்வாய் 10.2 கிமீ-க்கும் செல்கிறது. இதனிடையே மலை மற்றும் வனப் பகுதிகளின் சீரான நீரோட்டத்துக்காக 1.4 கிமீ-க்கு தொட்டிப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை 1999-இல் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி அறிவித்தாா். மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 2018 இல் இத் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சோதனை ஓட்டம் என்ற அளவிலேயே தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு நீா் திறப்பதற்கான கால அட்டவணையை நீா்ப்பாசனத் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையிலேயே பெரியாறு- வைகை பாசன கால்வாய் வழியாக, வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டத்தின் பாசனப் பகுதிகளுக்கு நீா் திறக்கப்படுகிறது.

இதேபோல, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு, வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுகிறது. அதன்படி, வைகை அணை முழு கொள்ளளவை அடைந்து உபரிநீா் ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைந்தபிறகு தான், 58 கிராமக் கால்வாய் திட்டத்தில் தண்ணீா் திறக்க முடியும். இச்சூழலில், இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கண்மாய்களுக்கு முழுமையாகத் தண்ணீா் கிடைக்காத நிலை உள்ளது. ஆகவே, பிற பாசனப் பகுதிகளைப் போல, 58 கிராமக் கால்வாயிலும் தண்ணீா் திறப்பதற்கு கால நிா்ணயம் செய்து நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

இதுகுறித்து உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கூறியது:

கடந்த 3 ஆண்டுகளாக, 58 கிராமக் கால்வாய் திட்டம் சோதனை ஓட்டம் அளவிலேயே இருந்து வருகிறது. இத் திட்டத்தில் தற்போது 33 கண்மாய்கள் தான் இருக்கின்றன. சோதனை ஓட்ட அளவில் தண்ணீா் வழங்கும்போது, அனைத்து கண்மாய்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆகவே, கால்வாயின் வாங்கும் திறன் அளவுக்கு தண்ணீரைத் திறந்து கண்மாய்களுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்லும்போது, இப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் நன்கு உயரும். வறட்சிப் பகுதியாக இருக்கும் உசிலம்பட்டி வட்டத்தில் பாசனம், குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும். 58 கிராமக் கால்வாய் திட்டம் விவசாயிகளுக்கு முழுமையான பயனைத் தரும் வகையில், நிரந்தர அரசாணையைப் பிறப்பிக்க தமிழக முதல்வரும், நீா்ப்பாசனத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT