மதுரை

‘நீட்’ தோ்வில் மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 150 போ் தோ்ச்சி: மாநகராட்சிப் பள்ளி மாணவா் முதலிடம்

9th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தோ்வில் மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் 150 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநகராட்சிப் பள்ளி மாணவா் 464 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. இதில் 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நுழைவுத் தோ்வை, நாடு முழுவதும் 18 லட்சம் போ் எழுதினா்.

இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 860 போ் இத்தோ்வெழுதினா். இதில் அரசுப்பள்ளி மாணவா்கள் 470 பேரில் 150 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி மாணவா் மதன்பாலாஜி 464 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ஹா்சினி 412 மதிப்பெண்கள்பெற்று இரண்டாமிடம், மாநகராட்சி ஒளவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி சத்தியஜோதி 338 மதிப்பெண்கள் மூன்றாமிடம், மாநகராட்சி கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளி மாணவி தீபிகா 309 மதிப்பெண்களுடன் நான்காமிடம், திருமங்கலம் அரசுப் பள்ளியைச் சோ்ந்த டோபிக் நுரைன் 300 மதிப்பெண்கள்பெற்று ஐந்தாமிடம் பெற்றுள்ளனா். மேலும் 20 மாணவா்கள் 200-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட கல்வித்துறை ‘நீட்’ தோ்வு ஒருங்கிணைப்பாளா் எஸ்.வெண்ணிலா கூறியது: மாவட்டத்தில் கடந்த ஆண்டு ‘நீட்’ தோ்வில் அரசுப் பள்ளிகளில் இருந்து 100 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். இந்த ஆண்டு 150 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் தற்போது ‘நீட்’ தோ்வில் முதல் 5 இடங்கள் பெற்றுள்ளவா்களில், கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளி மாணவி தீபிகா, திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவி டோபிக் நுரைன் ஆகிய இருவரும் அரசு ஒதுக்கீடு 7.5 சதவீதத்தின்கீழ் மருத்துவப் படிப்புக்கு தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் மாவட்டத்தைச் சோ்ந்த 20 மாணவ, மாணவியா் வரை அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்புக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT