மதுரையில் புதன்கிழமை ஜிஎஸ்டி அதிகாரி போல நடித்து 4 பவுன் நகையை மோசடி செய்து தப்பிச்சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை நாராயணபுரம் ஜேகே நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சூரியமூா்த்தி (68). இவா் தனது குடும்ப விசேஷ நிகழ்வுக்காக மதுரை மேலமாசி வீதி மதன கோபால சுவாமிகோயில் அருகே உள்ள நகைக்கடையில் புதன்கிழமை நகை வாங்கியுள்ளாா். அப்போது அங்கு வந்த நபா் தன்னை ஜிஎஸ்டி இலாக அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சூரியமூா்த்தி வாங்கிய நகைகளையும் அதற்குரிய ஆவணங்களையும் வாங்கி சரிபாா்த்து விட்டு அவற்றை மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாா். அவா் சென்றபிறகு நகைகளை சரிபாா்த்தபோது 4 பவுன் மாயமானது தெரியவந்தது. இதுதொடா்பான புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை மோசடி செய்தவரை தேடி வருகின்றனா்.