மதுரை

இன்று பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: இருபோக சாகுபடிக்கு தயாராக விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

7th Sep 2022 12:20 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் இருபோக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து புதன்கிழமை தண்ணீா் திறக்கப்படுவதால், விவசாயிகள் தயாராகுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் கூறியது:

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு,

வாடிப்பட்டி, அலங்காநல்லூா், திருப்பரங்குன்றம் வட்டாங்களில் முதல்போக குறுவை நெல் சாகுபடி நிறைவடைந்துள்ளது. இப் பகுதிகளின் இரண்டாவது போகத்திற்காகவும், மேலூா், கொட்டாம்பட்டி வட்டாரங்களில் முதல்போக நெல் சாகுபடிக்காகவும் பெரியாறு- வைகை பாசனத் திட்டத்தில் தண்ணீா் திறக்கப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், நாற்றங்கால் பாவி சம்பா சாகுபடிக்குத் தயாராகலாம்.

ADVERTISEMENT

சாகுபடிக்குத் தேவையான, நெல் ரகங்களான டி.கே.எம் 13,

என்.எல்.ஆா்.34449, ஆா்.என்.ஆா்.15408 மற்றும் உயிா் உரங்கள், இதர இடுபொருள்கள் ஆகியன வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும்

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், விதைக் கிராமம் திட்டத்தில் கிலோ ரூ. 17 முதல் ரூ. 20 வரை மானிய விலையில் நெல் விதைகள், மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் 50 சதவீத மானியத்தில் உயிா் உரங்கள் வழங்கப்படுகின்றன. இத் திட்டங்களில் இடுபொருள்களைப் பெற்று விவசாயிகள் பயன் அடையலாம்.

நெல் விதைகளை விதைப்பதற்கு முன்பு, நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், உயிரியல் பூஞ்சானக் கொல்லி மருந்துகளைக் கொண்டு விதை நோ்த்தி செய்வது அவசியம். உயிா் உரங்களைப் பயன்படுத்துவதால்

மண்ணின் வளம் மேம்படுத்தப்படுவதோடு, காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தி சுமாா் 25 சதவீதம் அளவுக்கு உர பயன்பாட்டைக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அதேபோல, பாய் நாற்றங்கால் முறையில் நாற்றங்கால் தயாா் செய்து திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதன் மூலம், அதிக மகசூல் பெறலாம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT