மதுரை

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புதிய ஆசிரியா்கள்:நியமன ஆணையை வழங்கினாா் மேயா்

29th Oct 2022 11:21 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை மேயா் வ.இந்திராணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்துக் கல்வி உபகரணங்கள் மாநகராட்சியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயா்த்தும் வகையில் பல்வேறு நிலைகளில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு வருகிறாா்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புதிய ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதன்படி மாநகராட்சி ஈ.வெ.ரா.நாகம்மையாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்(கணக்கு), திரு.வி.க. மாநகராட்சிபள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் (வேதியியல்), சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியா் (தாவரவியல்), வெள்ளி வீதியாா் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் (தாவரவியல்), கம்பா் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் (தாவரவியல்), பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் (வணிகவியல்) ஆகிய ஆறு மாநகராட்சி பள்ளிகளுக்கும் ஆறு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களுக்கு மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயா் வ.இந்திராணி பணி ஒதுக்கீடு ஆணைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்விக்குழுத் தலைவா் ரவிச்சந்திரன், மாநகராட்சி கல்வி அலுவலா் நாகேந்திரன், அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT