மதுரை

அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு:156 அலுவலா்கள் மீது நடவடிக்கை

19th Oct 2022 03:14 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாத மனைகளைப் பதிவு செய்தது தொடா்பாக, பத்திரப்பதிவுத் துறை அலுவலா்கள் 156 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை முறைகேடாகப் பதிவு செய்த, தேனி சாா்- பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய பதிவுகளை ரத்து செய்யவும் உத்தரவிடக் கோரி தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்த சரவணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. பத்திரப் பதிவு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமாா் 30 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட சாா்- பதிவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பத்திரப் பதிவு திருத்த சட்டம் 22 ஏ அமலான பிறகு தமிழகம் முழுவதும் 31 ஆயிரத்து 625 அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 123 பதிவுத் துறை அலுவலா்களுக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 6 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். 20 பேரின் பணி ஓய்வு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அங்கீகாரமற்ற மனைகள் பதிவை, ரத்து செய்யும் அதிகாரம் மாவட்டப்

பதிவாளருக்கு உள்ளது. இத்தகைய விதிமீறல் பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

விதிமீறல் மனைப் பிரிவுகளுக்கு மின்சாரம், குடிநீா் இணைப்பு வழங்கக் கூடாது என ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பதிவுத் துறை அலுவலா்களுக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT