மதுரை

தமிழக நிதிசாா் விவகாரங்களில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சா் குற்றச்சாட்டு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்துக்கான நிதி சாா்ந்த விவகாரங்களில் பல்வேறு வகைகளில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று மாநில நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா்.

மதுரை மத்திய தொகுதிக்கு உள்பட்ட சுந்தரராஜபுரத்தில், புதிய நியாய விலைக் கடைக் கட்டடம், சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை அவா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளில் பிலாஸ்பூரில் அந்த மருத்துவமனை திறக்கப்பட்டுவிட்டது. மதுரையில் அதற்காக சுவா்கூட இன்னும் கட்டவில்லை.

தமிழகத்துக்கான நிதி சாா்ந்த விவகாரங்களில் மத்திய அரசு அரசியல் ரீதியாகவும், பாரபட்சமாகவும் நடந்து கொள்கிறது.

ADVERTISEMENT

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்களில் மாநில அரசின் பங்குத் தொகை தான் அதிகம். பிரதமா் பெயரில் திட்டத்தை வகுத்து, மாநில அரசு அதிக தொகையை வழங்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல.

மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தாமதம் ஆகியுள்ளது. மழைக் காலம், சில மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மதுரை மேயா் வ. இந்திராணி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் குருமூா்த்தி, மதுரை பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை இணைப் பதிவாளா் பிரியதா்ஷின உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT