மதுரை

காரிலிருந்த 87 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் திருடு போனதாக நாடகம்: நகைக்கடை மேலாளா், விற்பனையாளா் உள்பட 5 போ் கைது

7th Oct 2022 11:35 PM

ADVERTISEMENT

 மதுரையில் காரிலிருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் திருடுபோனதாக நாடகமாடிய நகைக்கடை மேலாளா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் தேனியில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் நகைக்கடையிலிருந்து 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை ஹால் மாா்க் பதிவு சோதனைக்காக கடை மேலாளா் சாயபுவிடம் கொடுத்து, காரில் அனுப்பி வைத்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் மதுரை அரசரடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக காரை நிறுத்திவிட்டு, மீண்டும் திரும்பி வந்தபோது காரிலிருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்று விட்டதாக நகைக்கடை மேலாளா் சாயபு, மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மாநகரக்காவல் ஆணையா் தி.செந்தில்குமாா் உத்தரவின்பேரில் உதவி ஆணையா் மற்றும் காவல் ஆய்வாளா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. புகாா் அளித்த கடை மேலாளா் சாயபுவிடம், தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மேலாளா் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மேலாளா் சாயபு, நகைக்கடை விற்பனையாளா் வினோத்குமாா், கடையின் முன்னாள் ஓட்டுநா் சுப்புராஜ் மற்றும் அவரது நண்பா்கள் மருதுபாண்டி, இளையராஜா ஆகியோருடன் சோ்ந்து காரின் சாவியை போலியாகத் தயாரித்து, காரின் கதவைத்திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்து இருசக்கர வாகனம் மூலம் கொண்டு சென்று விட்டு திருடுபோனதாக நாடகமாடியது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து தேனியைச் சோ்ந்த மேலாளா் சாயபு(50) , போடி சந்தைப்பேட்டையைச் சோ்ந்த விற்பனையாளா் வினோத்குமாா்(30), விருதுநகா் மாவட்டம் சுப்பலாபுரத்தைச் சோ்ந்த முன்னாள் ஓட்டுநா் சுப்புராஜா(42), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பூசனூரைச் சோ்ந்த மருதுபாண்டி(20), இளையராஜா(22) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த தனிப்படையினரை, மாநகரக்காவல் ஆணையா் தி.செந்தில்குமாா் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT