மதுரை

வாகன நிறுத்துமிடமாக மாறிய கல்பாலம் சாலை: போக்குவரத்துக்கு தடைவிதிப்பால் பொதுமக்கள் அவதி

4th Oct 2022 03:39 AM

ADVERTISEMENT

மதுரையில் கல்பாலம் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

மதுரை கல்பாலம் வைகை வடகரை மற்றும் தென்கரைப் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப்பகுதியாகும். கல்பாலம் மூலம் யானைக்கல் பகுதிக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதில் செல்லமுடியும் என்பதால் இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள், சிறிய ரக வாகனங்கள் கல் பாலம் சாலையை அதிகம் பயன்படுத்தி வந்தன.

இந்நிலையில் கல்பாலம் சாலையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க மாநகராட்சி சாா்பில் திட்டமிடப்பட்டு, பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சுவா்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. பின்னா் பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் செடிகொடிகள் வைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மேலும் பூங்கா அமைக்கப்படுவதால் கல்பாலம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாதபடி தடைகளும் அமைக்கப்பட்டன. இதனால் யானைக்கல் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் அதற்கருகே உள்ள புதிய மேம்பாலம் வழியாக வைகை ஆற்றை கடந்து சிம்மக்கல் வழியாக யானைக்கல் பகுதிக்கு சுற்றி சென்று வந்தன. இந்நிலையில் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில் கல்பாலம் சாலை திடீா் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது. வாடகைக் காா்கள், சரக்கு வாகனங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கல்பாலம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறும்போது, வடகரையில் இருந்து தென்கரைக்கு செல்ல கல்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் பூங்கா அமைக்கப் போவதாகக்கூறி சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு சாலையும் அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுற்றி சென்று வந்து அவதிப்பட்டு வந்தோம். இந்நிலையில் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டு காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலையை திறக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT